பக்கங்கள்

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

வீரமாமுனிவர்


தோற்றமும், இந்தியாவுக்கு வருகையும்...

வீரமாமுனிவர்  இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் 1680 நவம்பர் 8ஆம் திகதி பிறந்தார். இவரின் இயற்பெயர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Costanzo Giuseppe Beschi ) என்பதாகும். இளமையிலே எளிய வாழ்க்கை வாழ விரும்பிய இவர்  இறையுணர்வு மிக்கவராக இருந்ததால் 18 வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். உலக மொழிகள் கற்கும் ஆர்வத்தால் 30 வயதினுள் கிரேக்கம், லத்தீன், போத்துக்கீசம், பிரன்சு, ஜேர்மன், ஆங்கிலம், ஈரானிய மொழியுட்பட 9 மொழிகளில் தேர்ச்சியுடையவரானார். 5 வருடங்கள் இலக்கண ஆசிரியராகக் பணிபுரிந்து  நான்கு ஆண்டுகளில் கிறித்தவ வேதத்தைக் கற்று 1709இல் குருவாக திருநிலைப் படுத்தப்பட்டு கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் 1710 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்ததார்.  சில நாட்கள் கோவாவில் தங்கி தமிழ்நாடு செல்ல உத்தேசித்து, கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக அம்பலக்காடு வந்து தங்கி மதுரையில் காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார். மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர்  தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். பெசுகி என்ற தம் பெயரை 'தைரியநாதர்' என்று மாற்றிக் கொண்டவர், பின்நாளில் 'தைரியநாதர்' என்னும் பெயர் வடமொழி என அறிந்து... நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி  செந்தமிழில் வீரமாமுனிவர்  என மாற்றிக் கொண்டார். 1606 முதல் 1645 வரையான காலப்பகுதியில் மதுரையில் பணியாற்றிய இராபர்ட் தெ நொபிலி அடிகளார் ஐரோப்பிய வாழ்க்கை முறைகைளைக் கைவிட்டு, தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படையில், காவியுடை அணிந்து, சைவ உணவு உண்டு வாழ்ந்ததை தெரிந்துகொண்ட இவர் அவர் பாணியிலையே தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்.

தமிழால் ஈர்க்கப்பட்டு தமிழ்த்தொண்டுகளில்.....

இவர் மதுரைக்கு வந்தபின்  சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று  இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார். தமிழ் இலக்கண, இலக்கியச் சுவடிகளைப் பல இடங்களுக்கும் தேடிச்சென்று  ஆராய்ந்து கற்றறிந்து அதில் மற்றவர்களுக்கு இலகுவில் புரியாதவைகளாக இருந்த கவிதை வடிவிலானவற்றை உரைநடையாக மாற்றினார். அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கமாக இருந்தது அந்த வழக்கத்தை மாற்றினார். மேலும் குறில், நெடில் விளக்க என்று "ர" சேர்த்தேழுதுவது வழக்கமாக இருந்தது உதாரணமாக 'ஆ' எழுத 'அ' விற்கு பக்கத்தில் 'ர' சேர்த்து 'அர' என்று இருந்தது, இதனை  'ஆ','ஏ ' என எழுத்துச் சீரமைப்பு செய்த பெருமை இவரையே சாரும்.

பின்னிப்பிணைந்து கிடந்த தமிழ்  இலக்கியத்தாலான இலக்கணங்களை  வகை வகையாகப் பிரித்து தமிழ் இலக்கணங்களை தொகுத்தார். இவர் தொகுத்து எழுதிய இலக்கண நூல்களான தொன்னூல் விளக்கம்என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தந்தவர் கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்ததுத்  தந்தார்.அது மட்டுமின்றி தமிழின் தொன்மை இலக்கண நூலான தொல்காப்பியத்தை உரைநடையில் வடிவமைத்து தந்தார்.

தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்நூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அதுமட்டுமில்லாது அவர்கள் தமிழை இலகுவில் படிப்பதற்காக 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டு தமிழ்-இலத்தீன் அகராதியை உருவாக்கினார் இதுதான் தமிழில் உருவான முதல் அகராதியாகும். இதனைத்தொடர்ந்து பின் வந்த நாட்களில் 4400 சொற்களைக் கொண்டு  தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார். திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

 தேம்பாவணி, வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை, திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை, ஆகிய காவிய, உரைநடை, இலக்கிய நூல்களை படைத்தார். அதிலும்  Jean de la Fontaine எனும் பிரன்சியரால் எழுதப்பட்டு  ஐரோப்பாவில் பிரபலமாக இருந்த நகைச்சுவை இலக்கியத்தை தமிழில் "பரமார்த்த குருவின் கதை" என மொழிபெயர்த்தார். இதுவே தமிழில் முதல் முதலாக வெளிவந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும். மேலும் 'தேம்பாவணி' என்னும் காவிய நூலில்
மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம்|விருத்தப் பாக்களை படைத்தார். அதிலும் ஒரு சிறப்பு என்னவெனில் பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருப்பதோடு தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு.

தமிழில் கடினச் சொற்களுக்குப் பொருள் காண 'நிகண்டு'களையே நம்பிக் கொண்டிருந்த நிலையை மாற்றியதுடன்,  பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி என நான்கு பகுப்புகளைக் கொண்டு 1732 இல்  'சதுரகராதி'  யை தந்தார்.

இறுதியில்...

வீரமாமுனிவரைப் போல வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம் உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்களைப்  படைத்திருக்க மாட்டார்கள். கிறித்தவம் தமிழ் மொழிக்குச் செய்த சிறந்த சேவைகளில் ஒன்றாக இதனை நாம் பார்க்கலாம்....
''திராவிட மொழியியல் வல்லுநர்களுக்கெல்லாம் மிகச் சிறந்த முன்னோடியும், 18 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தமிழ்ப்புலவருமான வீரமா முனிவர் இறுதியாக 1746 ஆம் ஆண்டு பெப்பிரவரி 4 ஆம் திகதி இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரைப் பலரும் புகழ்ந்து போற்றியுள்ளதைப்போல... இன்றும் போற்றுகின்றனர்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக