பக்கங்கள்

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

வீரமாமுனிவர்


தோற்றமும், இந்தியாவுக்கு வருகையும்...

வீரமாமுனிவர்  இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் 1680 நவம்பர் 8ஆம் திகதி பிறந்தார். இவரின் இயற்பெயர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Costanzo Giuseppe Beschi ) என்பதாகும். இளமையிலே எளிய வாழ்க்கை வாழ விரும்பிய இவர்  இறையுணர்வு மிக்கவராக இருந்ததால் 18 வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். உலக மொழிகள் கற்கும் ஆர்வத்தால் 30 வயதினுள் கிரேக்கம், லத்தீன், போத்துக்கீசம், பிரன்சு, ஜேர்மன், ஆங்கிலம், ஈரானிய மொழியுட்பட 9 மொழிகளில் தேர்ச்சியுடையவரானார். 5 வருடங்கள் இலக்கண ஆசிரியராகக் பணிபுரிந்து  நான்கு ஆண்டுகளில் கிறித்தவ வேதத்தைக் கற்று 1709இல் குருவாக திருநிலைப் படுத்தப்பட்டு கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில் 1710 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்ததார்.  சில நாட்கள் கோவாவில் தங்கி தமிழ்நாடு செல்ல உத்தேசித்து, கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக அம்பலக்காடு வந்து தங்கி மதுரையில் காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார். மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர்  தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். பெசுகி என்ற தம் பெயரை 'தைரியநாதர்' என்று மாற்றிக் கொண்டவர், பின்நாளில் 'தைரியநாதர்' என்னும் பெயர் வடமொழி என அறிந்து... நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி  செந்தமிழில் வீரமாமுனிவர்  என மாற்றிக் கொண்டார். 1606 முதல் 1645 வரையான காலப்பகுதியில் மதுரையில் பணியாற்றிய இராபர்ட் தெ நொபிலி அடிகளார் ஐரோப்பிய வாழ்க்கை முறைகைளைக் கைவிட்டு, தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படையில், காவியுடை அணிந்து, சைவ உணவு உண்டு வாழ்ந்ததை தெரிந்துகொண்ட இவர் அவர் பாணியிலையே தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்.

தமிழால் ஈர்க்கப்பட்டு தமிழ்த்தொண்டுகளில்.....

இவர் மதுரைக்கு வந்தபின்  சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று  இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார். தமிழ் இலக்கண, இலக்கியச் சுவடிகளைப் பல இடங்களுக்கும் தேடிச்சென்று  ஆராய்ந்து கற்றறிந்து அதில் மற்றவர்களுக்கு இலகுவில் புரியாதவைகளாக இருந்த கவிதை வடிவிலானவற்றை உரைநடையாக மாற்றினார். அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கமாக இருந்தது அந்த வழக்கத்தை மாற்றினார். மேலும் குறில், நெடில் விளக்க என்று "ர" சேர்த்தேழுதுவது வழக்கமாக இருந்தது உதாரணமாக 'ஆ' எழுத 'அ' விற்கு பக்கத்தில் 'ர' சேர்த்து 'அர' என்று இருந்தது, இதனை  'ஆ','ஏ ' என எழுத்துச் சீரமைப்பு செய்த பெருமை இவரையே சாரும்.

பின்னிப்பிணைந்து கிடந்த தமிழ்  இலக்கியத்தாலான இலக்கணங்களை  வகை வகையாகப் பிரித்து தமிழ் இலக்கணங்களை தொகுத்தார். இவர் தொகுத்து எழுதிய இலக்கண நூல்களான தொன்னூல் விளக்கம்என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தந்தவர் கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்ததுத்  தந்தார்.அது மட்டுமின்றி தமிழின் தொன்மை இலக்கண நூலான தொல்காப்பியத்தை உரைநடையில் வடிவமைத்து தந்தார்.

தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்நூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அதுமட்டுமில்லாது அவர்கள் தமிழை இலகுவில் படிப்பதற்காக 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டு தமிழ்-இலத்தீன் அகராதியை உருவாக்கினார் இதுதான் தமிழில் உருவான முதல் அகராதியாகும். இதனைத்தொடர்ந்து பின் வந்த நாட்களில் 4400 சொற்களைக் கொண்டு  தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார். திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

 தேம்பாவணி, வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை, திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை, ஆகிய காவிய, உரைநடை, இலக்கிய நூல்களை படைத்தார். அதிலும்  Jean de la Fontaine எனும் பிரன்சியரால் எழுதப்பட்டு  ஐரோப்பாவில் பிரபலமாக இருந்த நகைச்சுவை இலக்கியத்தை தமிழில் "பரமார்த்த குருவின் கதை" என மொழிபெயர்த்தார். இதுவே தமிழில் முதல் முதலாக வெளிவந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும். மேலும் 'தேம்பாவணி' என்னும் காவிய நூலில்
மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம்|விருத்தப் பாக்களை படைத்தார். அதிலும் ஒரு சிறப்பு என்னவெனில் பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருப்பதோடு தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு.

தமிழில் கடினச் சொற்களுக்குப் பொருள் காண 'நிகண்டு'களையே நம்பிக் கொண்டிருந்த நிலையை மாற்றியதுடன்,  பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி என நான்கு பகுப்புகளைக் கொண்டு 1732 இல்  'சதுரகராதி'  யை தந்தார்.

இறுதியில்...

வீரமாமுனிவரைப் போல வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம் உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்களைப்  படைத்திருக்க மாட்டார்கள். கிறித்தவம் தமிழ் மொழிக்குச் செய்த சிறந்த சேவைகளில் ஒன்றாக இதனை நாம் பார்க்கலாம்....
''திராவிட மொழியியல் வல்லுநர்களுக்கெல்லாம் மிகச் சிறந்த முன்னோடியும், 18 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தமிழ்ப்புலவருமான வீரமா முனிவர் இறுதியாக 1746 ஆம் ஆண்டு பெப்பிரவரி 4 ஆம் திகதி இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரைப் பலரும் புகழ்ந்து போற்றியுள்ளதைப்போல... இன்றும் போற்றுகின்றனர்....

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்




தோற்றம்...
இவர் யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 இல் (சித்திரபானு வருடம் மார்கழி 5) புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை – சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகனாகப் பிறந்தார். இவரின்  இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை என்பதாகும். தகப்பனார் கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் அறிஞர்கள். அரசாங்கத்தில் வேலை பார்த்தவர்கள். நாவலருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சகோதரர்கள் நால்வரும் அரசாங்க உத்தியோகத்தர்கள். சகோதரிகளுள் ஒருவர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை அவர்களின் தாயார்.

கல்வி....
ஐந்தாவது வயதில் வித்தியாரம்பம் செய்யப்பெற்ற நாவலர், நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களையும் தமிழையும் கற்றார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். மூத்த தமையனாரால் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும் பின்னர் அவரது குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வி கற்க அனுப்பப்பட்டார். பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார்.
யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில் ( யாழ் மத்திய கல்லூரி) கற்று ஆங்கிலத்திலும் திறமை பெற்றார். அவரது இருபதாவது வயதில் அப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்ற நாவலர், அப்பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த பேர்சிவல் பாதிரியார் கிறிஸ்தவ வேதாகமத்தைத் (பைபிள்) தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவல் பாதிரியருடன் சென்னப்பட்டணம் சென்று அச்சிட்டுக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.
  
சமயப் பணி....
சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவசமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காகப் பணிபுரியத் தொடங்கினார் நாவலர். சைவ சமயம் வளரும் பொருட்டு பிரசங்கம் செய்வதெனத் தீர்மானித்தார். வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் 1847 டிசம்பர் 31 இல் இவரது முதற் பிரசங்கம் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பிரசங்கம் செய்தார். இப்பிரசங்கங்களின் விளைவாகப் பெரும் சமய விழிப்புணர்வு ஏற்பட்டது. வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்தார். சமய வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும் செலவிடத் தீர்மானித்து செப்டம்பர் 1848 இல் தமது மத்திய கல்லூரி 3 பவுண் மாதச் சம்பள ஆசிரியப் பணியைத் துறந்தார்.

அச்சுப் பணிகளில்.....
சைவப்பிள்ளைகளுக்குப் பாடநூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் 1949 ஆடி மாதம் சென்னைக்கு சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார். சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதித்தபின் ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார்.
தமது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.

தமிழகத்தில்......
இவரது பணி இலங்கையில் மட்டுமன்றி தமிழ் நாட்டிலும் பரவியிருந்தது. சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1959 வைகாசி மாதம் வெளியிட்டார். பெரியதொரு அச்சியந்திரத்தை விலைக்கு வாங்கி, சென்னை தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவிப் பல நூல்களையும் அச்சிட்டார். சென்னையிலும் திருவாவடுதுறை மற்றும் திருநாகைக்கோராணம் ஆகிய இடங்களில் தங்கி சைவப்பிரசங்கங்கள் செய்தபின் 1862 பங்குனியில் யாழ்ப்பாணம் திரும்பினார். 1863 மார்கழியில் மீண்டும் தமிழகம் சென்றார். அங்கு இராமநாதபுர சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்தார். அங்கிருந்து மதுரை சென்று மீனாட்சியம்மை சந்நிதானத்திலே பிரசங்கித்து மீனாட்சிக்கு அணிவிக்கப்பெற்ற பரிவட்டமும் பூமாலையும் அணிவிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார். குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமை ஆதீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தை மெச்சி நாவலரை பல்லக்கில் ஏற்றித் தம்பிரான்கள், ஓதுவார்கள் சூழ்ந்து வர சகல விருதுகள், மங்கல வாத்தியங்களுடன் பட்டணப் பிரவேசம் செய்வித்தார்கள். அங்கிருந்து திருப்பெருந்துறை, திருப்பள்ளிருக்குவேளூர், சீர்காழி ஆகிய தலங்களை வணங்கிச் சிதம்பரம் சேர்ந்தார். அங்கு 1864 ஐப்பசியில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையை ஸ்தாபித்தார். 1866 மார்கழி மாதம் சென்னை திரும்பி சைவப்பிரசங்கங்கள் செய்வதிலும் நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவலர் ஈடுபட்டார்.

சைவப் பாடசாலை நிறுவல்......
1870இல் நாவலர் கோப்பாயில் ஒரு வித்தியாசாலையை ஆரம்பித்து தமது செலவில் நடத்தினார். 1871 இல் வண்ணார்பண்ணையில் ஜோன் கில்னர் என்பவர் நடத்திய வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் விபூதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை வண்ணர்பண்ணையில் 1872 தை மாதத்தில் நிறுவி நடத்தினார். நிதி வசதி இன்மையால் இப்பாடசாலை நான்கு ஆண்டுகளே நடைபெற்றது. 1872 ஐப்பசி மாதத்தில் தாம் அதுவரை பெற்ற அனுபவத்தால் அறிந்த உண்மைகளைத் திரட்டி எழுதி அதற்கு யாழ்ப்பாணச் சமய நிலை எனப் பெயர் தந்து வெளிப்படுத்தினார். 1875க்கும் 1878க்கும் இடைப்பட்ட காலத்தில் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடற் புராணம், நன்னூற் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமஸ்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார்.

இவரின் இறுதி நாட்கள்.........
நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசைத் தினமான ஆடிச்சுவாதி அன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இடம்பெற்றது. 1879ஆம் ஆண்டு (பிரமாதி வருடம்) கார்த்திகை மாதம் 18ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாவலரது உடல் நலம் குன்றியது. அடுத்த மூன்று தினங்களும் குளிக்க முடியாதிருந்ததால் நாவலரது நித்திய சிவபூசை வேதாரணியத்துச் சைவாசாரியர் ஒருவரால் செய்யப்பட்டது. 21ஆம் நாள் வெள்ளிக்கிழமை (05-12-1879) இரவு தேவாரம் முதலிய அருட்பாக்களை ஓதும்படிக் கட்டளையிட்டு அவைகள் ஓதப்படும்போது சிதம்பரம், காசி, மதுரை, திருச்செந்தூர், முதலிய புண்ணியத்தலங்களின் விபூதி அணிந்து, உருத்திராட்சம் பூண்டு, கங்காதீர்த்தம் உட்கொண்டு, கைகளைச் சிரசின்மேற் குவித்து, இரவு ஒன்பது மணியளவில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.